விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் - கமல்ஹாசன்

 


விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.

என் சகோதரர் திரு. மு.க.ஸ்டாலின் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.

இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.

‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார்.