சமூக நல்லிணக்கத்தைப் பேணிய சுமுகமான தீர்வு எட்டப்பட வேண்டும்! இம்ரான் எம்பி வேண்டுகோள்







மட்டு - துஷாரா

இலங்கையில் வாழும் பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கு ஒரே காலப்பகுதியில் அமைந்துள்ள புனிதமான இரண்டு சமய நிகழ்வுகளை அமைதியாகவும், பரஸ்பர கௌரவத்துடனும் முன்னெடுப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"இவ்வருடம் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை அரசாங்கத்தினால் 'அரச வெசாக் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மே மாதம் 28 ஆம் திகதி முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் ஆரம்பமாவதுடன், அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் முஸ்லிம்கள் தமது மார்க்கக் கடமையான உழ்ஹிய்யா (பலியிடல்) கிரிடயைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

நாட்காட்டி மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இந்தத் தற்செயலான நிலைமை, முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் தடைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் இவ்வாறான தருணங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

வெசாக் என்பது அஹிம்சை மற்றும் கருணையைத் தாரக மந்திரமாகக் கொண்டது. அதேபோல், உழ்ஹிய்யா என்பது இறைவனுக்காகச் செய்யப்படும் தியாகம் மற்றும் ஏழைகளுக்கான ஈகையைப் பறைசாற்றும் கடமையாகும். இந்த இரண்டு உயரிய விழுமியங்களும் ஒன்றையொன்று மோதிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மாறாக, பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டில் இவை பரஸ்பர புரிதலுக்கான களமாக அமைய வேண்டும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இது தொடர்பில் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட அரச மேலிடங்களுக்கும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 

போயா தினமான மே 30 ஆம் திகதி தவிர்ந்த ஏனைய நாட்களில் இக்கடமைகளைச் சட்ட ரீதியாக நிறைவேற்ற முடியும் என்ற போதிலும், கள யதார்த்தங்களை உணர்ந்து அரசாங்கம் முறையான சுற்றுநிரூபங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் இலாபம் தேட நாம் விரும்பவில்லை. நாட்டின் அமைதி மற்றும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வே எமக்கு முதன்மையானது. எமது நோக்கம் இன முறுகல்களைத் தூண்டுவதல்ல, மாறாக எழக்கூடிய பிணக்குகளுக்கு முன்கூட்டியே அரசாங்கத்தின் ஊடாகத் தீர்வு காண்பதாகும்.

எனவே, அரசாங்கம் பின்வரும் விடயங்களை உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

1. முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளுக்கும், பௌத்த சமூகத்தின் கலாச்சார விழுமியங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு தெளிவான பொறிமுறையை மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

2. மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசாங்கம் நேரடி வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

3. உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றும் போது முஸ்லிம் சமூகம் மிகுந்த உணர்திறனுடன் (Sensitivity) செயற்பட உலமா சபையும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் வழங்கியுள்ள ஆலோசனைகளை அரசாங்கம் அங்கீகரித்து ஒத்துழைக்க வேண்டும்.

நாட்டின் அமைதியான பயணத்திற்கு இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இந்த விடயத்தில் அரசாங்கம் பாரபட்சமின்றி, அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை மதித்துச் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம். என்று அவர் தெரிவித்துள்ளார்.