நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ராணுவம் எப்போதும் பலமாகவே பேணப்பட வேண்டும். முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

 


இராணுவம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமே தவிர, படைக்குறைப்பு செய்வது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் எக்காரணம் கொண்டும் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது. முப்படைகளும் எப்போதும் பலமாக இருக்க வேண்டும்.

 குறிப்பாகப் புலனாய்வு அமைப்புகள் மிகவும் வலுவான கட்டமைப்புடன் இயங்க வேண்டும். நாம் முள்ளிவாய்க்கால் போரை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, மிகவும் பலம் பொருந்திய இராணுவக் கட்டமைப்பு நம்மிடம் இருந்தது.

நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ராணுவம் எப்போதும் பலமாகவே பேணப்பட வேண்டும்.

உலக வரைபடத்தில் சிங்கப்பூர் மிகச் சிறிய நாடாக இருந்தபோதிலும், தங்களது நாட்டின் வருடாந்த வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கே அவர்கள் அதிகளவிலான நிதியை ஒதுக்குகின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது." - என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.