நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும்

 


இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

மேல், தென், வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எச்சரிக்கை
கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, மொணராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.