தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் இது குறித்து தெரிவிக்கையில், அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜங்கனை, பதுளை மாவட்டத்தின் சொரபொர வாவி, கண்டி மாவட்டத்தின் வே மெடில்ல நீர்த்தேக்கம், தேவஹூவ, நாலந்த, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில, யோத எல, வெஹெரகல, குருநாகல் மாவட்டத்தின் தெதுறு ஓயா மற்றும் மொனராகலை மாவட்டத்தின் அலிகொடஆர ஆகிய பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 9,300 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. சொரபொர நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 500 கன அடிக்கும் அதிகமான நீர் மஹாவலி கங்கைக்கு வெளியேற்றப்படுகிறது.
கண்டி – நாலந்த நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1,000 கன அடிக்கும் அதிகமான நீரும், தேவஹூவ நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1,300 கன அடிக்கும் அதிகமான நீரும் தற்போது வெளியேற்றப்படுகின்றன.
மேலும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 4,000 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவுக்கு வெளியேற்றப்படுகிறது. வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 1,900 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தவிர, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் ஊடாக விநாடிக்கு 2,800 கன அடிக்கும் அதிகமான நீரும், அலிகொடாஹார நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் ஊடாக விநாடிக்கு 500 கன அடிக்கும் அதிகமான நீரும் கிரிந்தி ஓயாவுக்கு வெளியேற்றப்படுகின்றன.
அனுராதபுரத்தின் துருவில, பதுளையின் போம்புருஎல்ல, ஹம்பாந்தோட்டையின் தெபரவெவ, மொனராகலையின் சத்தாதிஸ்ஸ மற்றும் மாலின்பொத, வவுனியா மாவட்டத்தின் மயிலான்குளம் ஆகிய நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்கின்றன.
எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சியின் அடிப்படையில் இந்த நீர் வெளியேற்றப்படும் அளவு மாற்றமடையக்கூடும் என்பதால், நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர்ப்பாசன திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றின் அறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.





