சிறுவர்களுக்கு வலியை ஏற்படுத்துவது அல்லது அவர்களை அவமானப்படுத்துவது முற்றாகத் தடை செய்ய சட்டம் வருகிறது .

 

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பாக இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை 11,409 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மொத்தம் 10,455 முறைப்பாடுகள் பதிவாகின. இதில் 2,099 முறைப்பாடுகள் சிறுவர்களுக்கு எதிரான கொடூரமான நடத்தைகள் தொடர்பானவை.

 

 

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே முறைப்பாடுகளின் எண்ணிக்கை 11,000 ஐக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


 

சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியான தண்டனைகளைத் தடுக்கும் நோக்கில் தண்டனைச் சட்டக்கோவையில் பின்வரும் மாற்றங்களைச் செய்ய அதிகாரசபை பரிந்துரைத்துள்ளது.

“சிறுவர்கள் தொடர்பான உடல் ரீதியான தண்டனை” எனும் புதிய ஏற்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தண்டனை என்ற பெயரில் சிறுவர்களுக்கு வலியை ஏற்படுத்துவது அல்லது அவர்களை அவமானப்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்படும்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபா அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.

காயம் ஏற்படுத்துவது தொடர்பான தண்டனைச் சட்டத்தின் 314 மற்றும் 316 ஆம் பிரிவுகளில் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் சட்டத்துறை தலைவர் பிரதீகா சகலசூரிய மேலும் குறிப்பிட்டார்.

மேலும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், குறிப்பாகக் கடுமையான காயம் ஏற்பட்டால், தண்டனைகள் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

சட்டக்கோவையின் 308ஏ பிரிவில் “விருப்பத்துடன்” என்ற சொல்லுக்குப் பதிலாக “திட்டமிட்டு” என்ற சொல் சேர்க்கப்படவுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான ஓட்டைகள் அடைக்கப்படும்.

சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது உடல் ரீதியான தண்டனைகள் குறித்து பொதுமக்கள் எந்நேரமும் 1929 என்ற கட்டணமில்லா தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் என அதிகாரசபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பணிப்பாளர் ஷனிகா மலல்கொட கோரிக்கை விடுத்துள்ளார்.