செங்கலடியில் காட்டு யானைகள் அட்டகாசம்: கடைகள், மதில்கள் சேதம் - பீதியில் பொதுமக்கள்.











  ​மட்டக்களப்பு



 ​மட்டக்களப்பு- செங்கலடி பதுளை வீதியில் உள்ள நகர் எல்லைப் பகுதிக்குள் நேற்று சனிக்கிழமை (04) இரவு புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு பலத்த சேதங்களை விளைவித்துள்ளன.

​​நீண்ட காலமாக செங்கலடி பதுளை வீதியில் அமைந்துள்ள கறுத்தப் பாலத்திற்கு அருகிலுள்ள வயல் நிலங்கள் மற்றும் அதனை அண்டியுள்ள பற்றைக் காடுகளுக்குள் தங்கியிருக்கும் யானைக் கூட்டமே இவ்வாறு நகருக்குள் ஊடுருவியுள்ளது.

​நேற்றிரவு ஊடுருவிய யானைகள் வீதியோரத்திலுள்ள கடைகளின் கதவுகள் மற்றும் முன்பகுதிகள், குடியிருப்புகளின் சுற்று மதில்களை உடைத்துள்ளதுடன் மற்றும் தென்னை உள்ளிட்ட பல பயன்தரு மரங்களுக்கும் சேதம் விளைவிக்கப்படுள்ளது.

​அச்சத்தில் பொதுமக்கள்
​கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர்தான் இதே கறுத்தப் பாலப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்திருந்தார். அந்தச் சோகம் மறைவதற்குள், யானைகள் தற்போது நகரின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளமை மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

​பகலில் பற்றைக் காடுகளில் பதுங்கியிருக்கும் இந்த யானைகள், இரவு வேளைகளில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குள் வருவதைத் தடுக்க உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.