விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி பொலீசார் பாரிய வேட்டை 20 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.












 மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேசத்தில் வீடு ஒன்றின் வளவினுள்   ஆயுதங்கள் புதைத்து  வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து  இன்று பாரிய அளவிலான தோண்டும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டனர்.

 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்சனியின் உத்தரவின் பேரில் குறித்த வளவு பாரிய அளவில் 20 அடி ஆழத்திற்கு  தோண்டப்பட்டது.

 கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெய சுந்தரவின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி போலீஸ்மா அதிபர் பிரதீப் களுப்பானவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்தினவேல் வழிகாட்டலில் வாழைச்சேனை பிரிவுக்கு பொறுப்பான உதவி போலீஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜரூள் தலைமையிலான போலீஸ் குழுவினரால் ஆயுத தேடுதல்  இடம்பெற்றது.

 போலீசார்  சொகோ தடயவியல் பொலிஸ் பிரிவினர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உட்பட பலரும் இச் சோதனை நடவடிக்கைகள் ஈடுபட்டு இருந்தனர் ஜேசிபி இயந்திரங்கள் ஊடாக பாரியளவிலான தோண்டப்பட்ட போதிலும் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாரிய அளவிலான 20 அடி ஆழமுள்ள குழி மூடப்பட்டது .

காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தின் போது பெருமளவிலான படையினரும்,பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது