ஈரானிய புரட்சிகரப் படை (IRGC) அதிகாரத்தைக் கைப்பற்றுமா ?

 


மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், 2026 பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய 'ஒபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கையில் ஈரானின் உயர்மட்ட ஆன்மீகத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகின.

தெஹ்ரானில் உள்ள அவரது பாதுகாப்பான இல்லம் மற்றும் தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட துல்லியமான வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்ததை மார்ச் 1 ஆம் திகதி ஈரானிய அரசாங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம். இஜாஸ் சுட்டிக்காட்டியது போல, 1989 ஆம் ஆண்டு முதல் ஈரானின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அலி காமேனியின் மறைவு, ஈரானிய ஆட்சி அதிகாரத்தில் ஒரு பாரிய வெற்றிடத்தை (Power Vacuum) உருவாக்கியுள்ளது.

தற்போது ஈரானின் 'நிபுணர்கள் சபை' (Assembly of Experts) புதிய தலைவரைத் தெரிவு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள போதிலும், ஈரானிய புரட்சிகரப் படை (IRGC) அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வதால் உள்நாட்டில் ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ளது.