இறுதிக் கால நோயாளர்களுக்கான (Home-Based Palliative Care) சேவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

 

 

 






















மட்டக்களப்பு மாவட்டத்தின் மருத்துவ சேவை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னேற்றமாக  இறுதிக் கால நோயாளர்களுக்கான  (Home-Based Palliative Care) சேவை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர்  ஆர். முரளீஸ்வரன் அவர்களின் நீண்டநாள்  முயற்சியின் பலனாக 
 இன்று 29.3.2026  ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,  பிராந்தியத்திற்கு பொறுப்பான தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி, திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி, செங்கலடி பிரதேச வைத்திய சாலை பொறுப்பு வைத்திய அதிகாரி,  
பிராந்தியத்திற்கு பொறுப்பான மேற்பார்வை பொதுச்சுகாதார தாதிய பரிபாலகி,
நிருவாக உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர்,
பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள், 
உளவள ஆலோசனை  உதவியாளர் உட்பட  அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான FOBH, Lions club  இன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 

 சிகிச்சை வழங்க இயலாத நிலைக்கு வரும் நோயாளர்களுக்கு, அந்த நிலையிலிருந்து அவர்களின் கடைசிக்காலம் வரை மனிதநேயமான பராமரிப்பு, வலி நிவாரணம் மற்றும் மனநல ஆதரவு வழங்கப்படுவது  இதன் நோக்கமாகும்.

 இத்தகைய சேவை இலங்கையில் இன்னும் முழுமையாக விரிவடையாத நிலையில், சுகாதார அமைச்சினால் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, தேவையான கட்டிட வசதிகள் மற்றும் வளங்கள் குறைவாக இருந்த போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த சேவை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த திட்டத்தை முழுமையாக பொறுப்பேற்கும் வரை, FOBH எனும் அரச சார்பற்ற நிறுவனம் (NGO) இந்த சேவைக்கு அனுசரணை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து செயல்படும் குழுவானது இன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் உடல், உள மற்றும் சமூக தேவைகளை மதிப்பீடு செய்து தேவையான பராமரிப்பு சேவைகளை வழங்கும் பணியை ஆரம்பித்துள்ளார்கள்.