கொக்கட்டி சோலை கிணற்றில் பெண்ணின் சடலம் : “சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் முன்னிலையாகக் கூடாது” - கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்

 


மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்றும் இச்சம்பவத்தில் நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி வியாழக்கிழமை (26) கொக்கட்டிச்சோலை நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கரவண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த  ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே கிணற்றில் இன்னுமொரு பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவங்கள், அவற்றுடன் தொடர்புபட்ட கொலையின் பின்னணி கண்டறியப்பட்டு, பின்னர், பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் 4 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை 27ஆம் திகதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது, சந்தேக நபர்களுக்கு உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும், மாவட்டத்தில் இனி இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாவண்ணம் பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

துணைபோகாதே துணைபோகாதே கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே”, “போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்”, “பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்”, “நீதியை நிலைநாட்ட அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்”, “கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே”, “வழங்கு வழங்கு விரைவாக நீதியை வழங்கு” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியில் இருந்து பிரதேச சபை வரை பேரணியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்று, பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம் தொடரப்பட்டு, பின்னர் நிறைவடைந்தது.

இச்சம்பவம் தொடர்பில் வழங்கப்படுகின்ற நீதியானது, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கவேண்டும் எனவும், இச்சம்பவத்தினால் பொதுமக்கள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையிலான அந்நியோன்யம் இல்லாமல் போய்விட்டதாகவும், மக்கள் சந்தேகக் கண்கொண்டு தங்களைப் பார்ப்பதாகவும், இதனால் முச்சக்கரவண்டி சாரதிகள் பெருமளவு பாதிப்பினை எதிர்கொண்டு வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும், சந்தேக நபர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, வழங்கப்படுகின்ற தண்டனைகள் மூலம் மேற்சொன்ன சந்தேகங்களை நிவர்த்திக்க வழி செய்யவேண்டும் எனவும் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கரவண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபைத் தவிசாளர், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி சங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.