அம்பாறை மாவட்டம், காரைதீவு வயல்வெளியில் 100 ற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தரித்து நிற்கின்றன. வயல் வெளி பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் படையெடுத்து வந்து முகாமிட்டுள்ளன.
விளைச்சல் அறுவடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வயல்வெளிகளில் புதிதாக முளைக்கும் புற்களை உண்பதற்காக இந்த யானைக் கூட்டங்கள் இங்கு வருகை தருகின்றன.
பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் எனச் சுமார் 100 இற்கும் மேற்பட்ட யானைகள் இன்று (25) காலை முதல் மாலை வரை இப்பகுதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. குட்டி யானைகள் துள்ளி விளையாடுவதையும், பெரிய யானைகள் புதிய புல் இனங்களை உண்பதையும் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
வயல்வெளிகளை நோக்கி வரும் யானைகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக, வன ஜீவராசி திணைக்களத்தினர் வருகை தந்து சத்தங்களை எழுப்பி யானைகளைத் தடுத்தனர்.
மேலும் இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100 இற்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளை விற்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

.jpeg)
.jpeg)

.jpeg)





