இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் மானுட கௌரவத்தைப் பாதுகாக்கும் நாடு’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ரூ. 430.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வெறும் போக்குவரத்துச் சேவை மட்டுமல்லாது, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலத்திட்ட வரிசையில் மற்றுமொரு விசேட திட்டமாகும். பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள பௌதிகத் தடைகளை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கான பின்னணியை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
முதற்கட்டமாக, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் இலகுவாக ஏறி இறங்கக்கூடிய தாழ்தள வசதி கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பஸ்கள் நேற்று முன்தினம் (10) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இவை எதிர்வரும் சனிக்கிழமை கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு ‘மெட்ரோ பஸ்’ நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளன.





