நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மின்சாரத்தைப் பொதுமக்கள் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்தவும் .

 

 


 நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மின்சாரத்தைப் பொதுமக்கள் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது தனிப்பட்ட ரீதியில் மக்களின் பொருளாதாரத்துக்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் பாரிய நன்மையளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீடுகளில் தற்போது தேவையற்ற முறையில் அதிக மின்விளக்குகள் ஒளிரவிடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

"உங்கள் வீட்டில் இரண்டு அல்லது மூன்று மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டால், அவற்றில் இரண்டை அணைத்துவிட்டு அவசியமான ஒரு விளக்கை மாத்திரம் பயன்படுத்துங்கள்" என அவர் தெரிவித்தார். 

 இவ்வாறான சிறிய மாற்றங்கள் மக்களின் மாதாந்த மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க உதவும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், துணி துவைக்கும் இயந்திரங்களை நாளாந்தம் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

"சலவை இயந்திரங்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மூன்று நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்துங்கள். 

 வளர்ந்த நாடுகளின் மக்கள் இவ்வாறான தியாகங்களைச் செய்வதன் மூலமே முன்னேற்றமடைந்துள்ளனர்" என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான தியாகங்களைச் செய்யுமாறு தலைவர்கள் மக்களிடம் மாத்திரம் கூறவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், தலைவர்களாகிய தாங்களும் இத்தகைய சிக்கன நடவடிக்கைகளைத் தத்தமது வீடுகளில் நடைமுறையில் பின்பற்றி வருவதாகவும், முன்மாதிரியாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.