மட்டக்களப்பு ​வந்தாறுமூலையில் அறநெறிப் பாடசாலை புதிய கட்டடம் திறந்து வைப்பு.












வேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பணி மையத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலையில் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம், ஆதிபராசக்தி அறநெறிப் பாடசாலை புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வு 02.03.2026 அன்று மிக விமர்சையாக நடைபெற்றது.

​இந் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் உரையாற்றுகையில்

​நமது எதிர்காலச் சந்ததியினர் நவீன கல்வியோடு சேர்த்து, நமது பண்பாடு மற்றும் ஆன்மீக விழுமியங்களையும் கற்றுக்கொள்வது மிக அவசியமாகும். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ஒழுக்க விழுமியங்களை வளர்ப்பதில் அறநெறிப் பாடசாலைகளின் பங்கு மகத்தானது.

வந்தாறுமூலை பகுதியில் இத்தகையதொரு கட்டட வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.

எமது சமூகத்தின் அடையாளத்தையும் அறத்தையும் பேணிக் காக்க நாம் இத்தகைய கல்வி நிலையங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

லண்டன் ஈஸ்ஹாம் வேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு வார வழிபாட்டு மன்றத்தின் நிதி அனுசரணையில் இக் கட்டடம் நிர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

​இந் நிகழ்வில் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் முக்கியஸ்தர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.