ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும்
தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு
இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான்
உளவுத்துறை அமைச்சை சேர்ந்த அதிகாரிகள், ஒரு மூன்றாவது நாட்டின் வழியாக
அமெரிக்க மத்திய புலனாய்வு முகவரகததுக்கு (CIA) செய்தி அனுப்பியுள்ளனர்.
அதில்,
போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத்
தயாராக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதுவரை இரு
நாடுகளுக்கும் இடையே முறையான அல்லது தீவிரமான உரையாடல்கள் எதுவும்
நடைபெறவில்லை எனத் தெரியவருகிறது.
ஈரானின் இந்த சமிக்ஞைகளை அமெரிக்க
அதிகாரிகள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். பாதுகாப்புச் செயலாளர் பீட்
ஹெக்செத் இது குறித்துக் கூறுகையில், "நாங்கள் இப்போதே எமதுநடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின்
ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் அணுசக்தி இலக்குகளை அழிக்கும் கூட்டு
நடவடிக்கை தற்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளதாக பென்டகன் தரப்பு
கூறுகிறது.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து முரண்பட்ட
கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அளித்த ஒரு பேட்டியில்,
"ஈரான் தலைவர்கள் பேச விரும்புகிறார்கள், நானும் பேசச் சம்மதித்துள்ளேன்"
என்று கூறியிருந்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது சமூக
வலைதளப் பக்கத்தில், "ஈரான் பேச விரும்புகிறது, ஆனால் இப்போது காலம்
கடந்துவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, போரை நிறுத்த தாம் தூதுவிட்டதாக கூறப்படும் தகவல்களை ஈரான் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி கூறுகையில், "நாங்கள் இப்போது எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம். அமெரிக்காவுக்கு எவ்வித செய்தியையும் நாங்கள் அனுப்பவில்லை" எனத் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





