மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களிடையே காணப்படும் திறமைகளை வெளிக்கொணரும் நோக்குடன் முன்னைநாள் பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களினால் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வந்த சிறுதுளி நிகழ்வானது இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்தது, அதற்கு புத்துயிர் கொடுக்கும் வண்ணம் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளரின் கலை கலாச்சார விழுமியங்களை மீட்டெடுத்து இலைமறை காய்களாய் இருக்கும் அனைத்து திறமைகளையும் மேடைக்கு கொண்டுவரவேண்டும் எனும் தீராத கண்டிப்புடனான முயற்சியினால் இந்நிகழ்வு - 27.02.2026 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி ,உதவிப் பிரதேச செயலாளர் இளம்குமுதன். பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் சுதர்ஷன் ,நிருவாக உத்தியோகத்தர் தவேந்திரன் மற்றும் பிரதேச செயலக கலைஞர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து நிருவாகக் கிளை உத்தியோகத்தர்களினால் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் பல இசைநிகழ்வுகளும் இடம்பெற்றன பல இலைமறை காய்களாக இருந்த உத்தியோகத்தர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டது இதில் பல உத்தியோகத்தர்களின் கன்னி முயற்சியும் இடம் பெற்றமை சிறப்பம்சமாக காணப்பட்டது.
அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளரினால் உரை நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வுக்கு கால்கோழாக இருந்த சத்தியானந்தி நமசிவாயம் அவர்களையும் நினைவு படுத்தி இந்நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் எப்படி அமையவேண்டும் எனவும் இந்நிகழ்வுகள் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் எனவும் உழைத்து ஓய்ந்து களைத்த ஊழியர்களின் மன சந்தோசத்திற்காகவும் புத்துணர்வு ஊட்டும் வண்ணமும் கலை இலக்கிய இசை நடன நாட்டார் வழக்கு கதைகூறல் போன்ற அனைத்தையும் அடங்கியதாக இந்நிகழ்வு அமையவேண்டும். நிகழ்வுகளின் தன்மையை பொறுத்து நேர ஒதுக்கீட்டை அமைத்துக்கொள்வதாகவும் இன்னும் பற்பல கன்னி முயற்சியாளர்களும் கன்னி முயற்சியும் வெளிக்கொணரப்படவேண்டும் எனவும் உரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிகழ்வுகளை சிறப்பித்து தந்த அனைவருக்கும் ஏற்பாட்டுக்குழுவினரால் நன்றி உரை கூறப்பட்டதுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.



















