இலங்கையின் நிலத்தடி நீர் வரலாற்றில்
இதுவரை கண்டறியப்படாத அளவிலான மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை,
பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட குழாய் கிணறு
அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும்
வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் நாட்டின்
நீர் விநியோகத் திட்டத்திற்கு மிகப்பெரிய பலம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
தென் மாகாண நிலவியலாளர் இந்திரஜித் கமகே
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், நிமிடத்திற்கு
10,000 லீட்டர் (10 கன மீட்டர்) என்ற அளவில் தொடர்ச்சியான
நீர்ப்பாய்ச்சலைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் அடையாளம் காணப்படுவது
இதுவே முதல் முறை எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மன்னார், மடு பகுதியில்
நிமிடத்திற்கு 7,000 லீட்டர் நீர் கிடைக்கப்பெற்ற ஊற்றே நாட்டின்
மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரமாகக் கருதப்பட்டது. தற்போது பிட்டபெத்தரவில்
கண்டறியப்பட்ட ஊற்று அதனை விஞ்சியுள்ளது.
விசேட தொழில்நுட்பக் கருவிகளைப்
பயன்படுத்தி பாறை அடுக்குகளின் அமைப்பு மற்றும் நிலத்தடி பிளவுகளை விரிவாக
ஆய்வு செய்த பின்னரே இந்த நீர் ஊற்று வெற்றிகரமாக அடையாளம்
காணப்பட்டுள்ளது.
இந்த புதிய நீர் ஆதாரம் பிட்டபெத்தர,
மொரவக்க மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும்
கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கப் பயன்படுத்தப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இந்த
நீரைப் பகிர்ந்தளிப்பதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
நிலவியலாளர் மேலும் குறிப்பிட்டார்.





