எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இணையவழி மோசடிகள் தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்தார்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் தள்ளுபடிகள், பரிசுப் பொருட்கள் அல்லது விசேட சலுகைகள் என்ற பெயரில் போலியான விளம்பரங்கள் மற்றும் லிங்க்குகள் (Links) இணையத்தில் பரவக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது.
இவ்வாறான லிங்க்குகள் மூலம் பயனர்களைப் போலியான இணையதளங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கியமான தரவுகளைத் திருடும் அபாயம் காணப்படுகின்றது.
மேலும், வெசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களில் பொசன் மஹா டேட்டா தன்சல் போன்ற பல்வேறு பெயர்களில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிக்கும் மோசடிகளும் இடம்பெறக்கூடும்.
எனவே, இணையம் ஊடாகக் கிடைக்கும் அறிமுகமில்லாத லிங்க்குகள் அல்லது விளம்பரங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.





