கொழும்பில் மலைப்பாம்பை கழுத்தில் சுற்றியபடி நடனமாடிய பெண்ணை கைது செய்ய உத்தரவு .


 

கொழும்பு பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு இளவரசன் மற்றும் இளவரசி தெரிவுப் போட்டியின் போது, பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பை கழுத்தில் சுற்றியபடி நடனமாடிய குற்றச்சாட்டில் நெத்மி ஹிரண்யா என்ற இளம்பெண்ணைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி.ஜே. பிரேமரத்ன நேற்று (23) உத்தரவிட்டுள்ளார்.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், மலைப்பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும்.

பாதுகாக்கப்பட்ட விலங்கொன்றை முறையற்ற மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையில் கையாண்டமை சட்டப்படி குற்றமாகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

நெத்மி ஹிரண்யா என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.

குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவிடம் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.