மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு நிகழ்வு.

 

 


 



 




சுகாதாரம் தொடர்பான முக்கிய விடயங்களில் தெளிவூட்டும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு நிகழ்வு  (16) திங்கட்கிழமை 
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு பிரிவுகளுக்குப் பொறுப்பான பிராந்திய வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது துறைகளுடன் தொடர்புடைய முக்கிய தகவல்களை ஊடகங்களுக்கு விளக்கினர்.
முன்பள்ளி பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய மாற்றங்கள் மற்றும் அதன் மூலம் சிறுவர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள் குறித்து டாக்டர் எம். அச்சுதன் விளக்கமளித்தார்.
அடுத்து, டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து டாக்டர் சரவணன் கருத்து தெரிவித்தார். பராமரிப்பில்லாத காணிகள் மற்றும் நீண்ட காலமாக மூடப்பட்ட வீடுகள் டெங்கு பரவலுக்கான முக்கிய காரணிகளாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதைத் தடுக்கும் பொருட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் தற்கொலைச் சம்பவங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து டாக்டர் எஸ். டான் சௌந்தரராஜன் கருத்து வெளியிட்டதுடன், இவ்விடயத்தில் ஊடகங்களின் பொறுப்பான அணுகுமுறையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
காசநோய் தொடர்பான அறிகுறிகள், பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர் நபில் விரிவாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து, தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதற்கான காரணிகள், குறிப்பாக உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இன்மை ஆகியவை குறித்து புள்ளிவிவரங்களுடன் டாக்டர் ருதிஷன் விளக்கமளித்ததுடன், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் முன்வைத்தார்.
இறுதியாக, சமூக மட்டத்தில் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்த மதஸ்தாபனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அதிக பங்காற்ற வேண்டியது அவசியம் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தெரிவித்ததுடன் குறிப்பாக இளைஞர்களை சமூக நலச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்
இந்த ஊடக சந்திப்பின் மூலம் பல்வேறு சுகாதார விடயங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் மக்களுக்கு பகிரப்பட்டன.