"வல்லரசு நாடுகளுக்கு இடையிலான ஒவ்வொரு மோதலின் அதிர்வையும் இலங்கை போன்ற சிறிய நாடுகள் உணர்கின்றன"- நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை

 


சர்வதேச ரீதியில் நிலவும் மோதல் போக்குகள் இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், "வல்லரசு நாடுகளுக்கு இடையிலான ஒவ்வொரு மோதலின் அதிர்வையும் இலங்கை போன்ற சிறிய நாடுகள் உணர்கின்றன" என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ரீதியில் வர்த்தகம், எரிசக்தி மற்றும் விநியோகக் கட்டமைப்புக்களில் ஏற்படும் பாதிப்புகள், இலங்கையின் வாழ்வாதாரம், சந்தை நிலவரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடந்த கால யுத்த அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ள நாமல் ராஜபக்ஷ, வன்முறையின் அனைத்து வடிவங்களையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளே நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நெருக்கடிகளினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கணித்து, அவசரகாலத் திட்டங்களை அரசாங்கம் வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிராந்திய ரீதியிலான ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதே சிறந்த வழி எனவும் நாமல் ராஜபக்ஷ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.