மட்டக்களப்பு விசேட நிருபர்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை அகழ்வு செய்யும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2014ம் ஆண்டு குறித்த வழக்கு இடைநிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் இவ்வழக்கு விசாரணை மீள ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2025ம் ஆண்டு குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான பிரதேசம் அகழ்விற்கான கட்டளை கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டு கடந்த மாரச் 09ம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது இன்றைய தினம் திங்கட்கிழமை 30 ம் திகதி குறித்த பகுதியை அகழ்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் நிமித்தம் இன்றைய தினம் குறித்த மனிதப் புதைகுழி அமைந்துள்ள பிரதேசம் எனச் சந்தேகிக்கப்படும் பகுதியி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் கண்காணிப்பில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன
1990ம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டு திரும்பிய 167 ஹஜ் யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடத்தி காணாமலாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த மனித புதைகுழி பகுதி அகழப்படுகின்றது.
குறித்த அகழ்வின் போது களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், குறித்த வழக்கின் சட்டத்தரணிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸார், மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடயவியல் பிரிவு, அகழ்வாரய்ச்சித் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகத்தினர், பாதுகாப்புப் பிரிவினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் குறித்த பிரதேசத்தில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



.jpeg)



.jpeg)

.jpeg)
.jpeg)





