மின்சாரம் மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை .

 


உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் வறண்ட வானிலையைக் கருத்திற் கொண்டு, மின்சாரம் மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன சகல அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் வீதி விளக்குகள் தேவையற்ற நேரங்களில் ஒளிரவிடப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிகாலையில் தேவையற்ற முறையில் விளக்குகள் எரிவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பெருமளவு மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அரச அலுவலகங்களில் அவசியமற்ற மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைத்தல், மின்தூக்கி (Elevator) பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் ஒளிரும் விளம்பரப் பலகைகளின் நேரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வீடுகளில் தேவையற்ற மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைப்பதன் மூலம் தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாகனங்களைக் கழுவுதல் போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

குறைந்த மழைவீழ்ச்சி காரணமாக நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும்.

"உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தணியும் வரை, ஒரு நாடாகவும் சமூகமாகவும் நாம் இந்தச் சேமிப்புத் திட்டத்திற்குப் பழகிக்கொள்ள வேண்டும். அரச துறை இதில் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் என்பதுடன், பொதுமக்களின் ஒத்துழைப்பும் இதற்கு மிகவும் இன்றியமையாதது" என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.