மட்டக்களப்பு மாவட்டத்தில் “ஆரோக்கியமான கிராமங்கள்” உருவாக்கம் தொடர்பாக சுகாதார உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பட்டறை


 


 

 



















மட்டக்களப்பு மாவட்டத்தில் “ஆரோக்கியமான கிராமங்கள்” உருவாக்கம் தொடர்பாக சுகாதார உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில், சுகாதார மேம்பாட்டு வைத்திய அதிகாரி எம். அச்சுதன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 2026 மார்ச் 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
“ஆரோக்கியமான கிராமங்களை உருவாக்குதல்” என்ற தொனியில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம், கிராம மட்ட சுகாதார மேம்பாட்டு அமைப்புகளை உருவாக்குவதற்கான திறன்களை சுகாதார உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதாகும்.
பயிற்சியில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் தங்களது சேவைப் பகுதிகளுக்கு திரும்பி, அங்கு செயல்படும் ஏனைய அரச மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து கிராம மட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக தலைவர்களுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளனர். இதன் மூலம் அனைவரின் பங்களிப்புடனும் சுகாதார மேம்பாட்டு கிராமங்களை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், இதுவரை உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான கிராமங்களின் செயல்பாடுகள் இந்நிகழ்வின் போது மதிப்பாய்வு செய்யப்பட்டன. அதேபோல் வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஆரோக்கியமான கிராமங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமுதாய மற்றும் வலுவூட்டல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் அஜித் அழகியவண்ண (CCP), டாக்டர் இர்ஷாத் (Senior Registrar – Community Medicine) மற்றும் டாக்டர் தேஷான் (Senior Registrar – Community Medicine) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களையும் வெற்றிகளையும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கிக் கூறினர்.
மேலும், ஆரோக்கியமான கிராமங்களை உருவாக்குவதற்கான எதிர்கால செயல்திட்டங்களும் நடைமுறை கட்டங்களும் இந்நிகழ்வின் போது வகுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.