குளிரூட்டிகள் மாலை 3.00 மணிக்குப் பின்னர் அணைக்கப்பட வேண்டும் .

 


அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிலும்  குளிரூட்டிகள் மாலை 3.00 மணிக்குப் பின்னர் அணைக்கப்பட வேண்டும் என்றும் தனியார் துறையினரும் இதேபோன்ற மின்சார சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில்,அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில், இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒளிரும் விளம்பரப் பலகைகள்  மற்றும் திரைகளை இரவு 8.00 மணிக்குப் பின்னர் அணைத்து வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீதி விளக்குகளை இரவு 6 மணி முதல் 10 மணி வரை அணைத்து வைப்பதற்கான விசேட திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளை,  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குபற்றும் பெரிய அளவிலான விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளின் போது, தேசிய மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகளுக்கு மாற்று வழிகள் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தற்போதைய இக்கட்டான சூழலில் மின்சாரக் கட்டமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு இந்த நடைமுறைகளை  கண்டிப்பாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.