கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை மாணவர்களை
கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர்
குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம் (17) செவ்வாய்க்கிழமை
வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக நடைபெற்றது.
வைத்தியசாலையின் ஊழியர் சமூக நலன்புரிச் சங்கம் இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.
இந்நிகழ்வின்
பிரதம அதிதியாக, ஓய்வு நிலை உதவிக் கல்வி பணிப்பாளரும், பிரபல
ஊடகவியலாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமாகிய வித்தகர் விபுலமாமணி
வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வின்
போது தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, கல்வி பொது
தராதர சாதாரண தரத்தில் சித்தி அடைந்த, பல்கலைக்கழகத்துக்கு தெரிவான,
வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் பாராட்டி
கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த
காலங்களில் இவ் வைத்தியசாலை முன்னேற்றத்தில் பங்களித்தமைக்காக, பிரதம
அதிதியான வி.ரி.சகாதேவராஜா, மேடையில் நலன்புரிச் சங்கத்தின் தலைவர்
மருத்துவர் கு.சுகுணன் மற்றும் பொருளாளர் ரி.மதுரா ஆகியோரால் பொன்னாடை
போர்த்தி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின்போது 120 மாணவர்களுக்கு நலன்புரி சங்கம் ஏழு லட்சம் ரூபாய் செலவில் பரிசுகளையும் கௌரவிப்பையும் வழங்கியிருந்தது.
நிகழ்வில்
வைத்தியசாலை கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, நிருவாக உத்தியோகத்தர்
ரி.தேவஅருள், தாதியபரிபாலகர் என்.சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நலன்புரி
சங்க செயலாளர் எஸ்.மனோஜினி பொருளாளர் ரி.மதுரா ஆகியோர் நெறிப்படுத்திய இந்
நிகழ்வை ,சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் ப. செல்வகுமார் தொகுத்து
வழங்கினார்.
( காரையூர் வேதசகா )
















