மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளினால் ஏற்படும் ஆபத்துகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளினால் ஏற்படும் ஆபத்துகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று மாலை வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கடந்த ஆண்டு இறுதியாக நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட நடைமுறைகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. கடந்த ஆண்டு போரதீவுப்பற்று பிரதேசத்தில் 168 மில்லியன் ரூபா 48 திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது தொடர்பில் ஆராயப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் மணல் கடத்தல்கள் தொடர்பிலும் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய மணல் அகழ்வு குறித்தும் ஆராயப்பட்டது.

சட்டவிரோத மண் கடத்தல்கள் பரவலாக நடைபெற்றுவரும் நிலையில் அதனை தடுப்பதற்கு அம்பாறை - மட்டக்களப்பு எல்லைப் பகுதிகளில் பொலிஸ் காவலரண்களை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடரும் யானைகளில் அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அசமந்த போக்கு காரணமாக பிரதேசத்தில் முறையான வேலைத்திட்டங்கள் நடைபெறாமை குறித்து இதன்போது அதிர்ப்தி தெரிவிக்கப்பட்டதுடன்,

அரசாங்கம் யானைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை முன்வைத்து அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு அறிவித்திருக்கின்றபோதிலும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் மட்டும் அவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமை குறித்து அதிர்ப்தி தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் கடந்த காலத்தில் வீடமைப்பு திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத வீடுகள் தொடர்பிலும் கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ள வீடுகள் தொடர்பிலும் இங்கு பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பூரணப்படுத்தப்படாத வீடுகளை பூரணப்படுத்துவதற்கான படிப்படியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கடந்த வெள்ள அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட வீதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன் மிகமோசமான நிலையில் உள்ள வீதிகளை திருத்தியமைப்பதற்கும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் இ.ரங்கநாதனின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் உட்பட திணைக்கள தலைவர்கள், பிரதேசசபையின் உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் சுதாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.