அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பாக, நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, இக்கொலைச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (15) மாலை நடைபெற்ற விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் பின்வரும் நான்கு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டன. அதன்படி,
பாதுகாப்பு உறுதிப்படுத்தல்: நாட்டில் நிலவும் கொலை கலாசாரத்தை முடித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிப்புறக்கணிப்பு: நாடளாவிய ரீதியில் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் சட்டத்தரணிகள் விலகி இருப்பது.
கைது நடவடிக்கை: சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக்கொள்ளுதல்.
கண்டனம்: உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கடும் அதிருப்தி தெரிவிப்பது.
இந்த விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் சுமார் 3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்டதாகவும், இடவசதி குறைவினால் பலர் Zoom வழியாக இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





