போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இனிமேல் பிணை கிடையாது -சட்டம் வருகிறது .

 


போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் பிணையில் செல்ல கோரிக்கை விடுக்கும் போது, அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்பில் வைக்க முடியுமா என்பது குறித்து தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய, எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நச்சுப் பொருள் சட்டத் திருத்தத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் திருத்தம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குற்றச்செயல்களின் மூலம் பெற்றுக்கொண்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு அமைய, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.