மனிதனை உருவாக்கும் கல்வியே நாட்டுக்கு தேவை! இராமகிருஷ்ண மிஷன் இலங்கைத் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ்

 












( காரைதீவு சகா)

என்றும் நாட்டுக்கு தேவை மனிதனை உருவாக்கும் கல்வியே (Man making education).இதனை இன்றைய கல்வியியலாளர்கள் கூறவதற்கு முன்னர் 100 வருடங்களுக்கு முன் சுவாமி விவேகானந்தர் கூறியிருந்தார். இதற்கு அரசாங்கம்,ஆசிரியர்கள், பெற்றோர்கள் பூரணமாக உதவ வேண்டும். 

இவ்வாறு ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் தெரிவித்தார் .

அவுஸ்திரேலிய காரைதீவு  மக்கள் ஒன்றிய (ஒஸ்கார்) ஏற்பாட்டில் பூண்டுலோயாவில் இடம் பெற்ற வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரது திருவுருவச் சிலைகள் திறப்பு விழாவில் பிரதம ஆன்மீக அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

இந்த விழா கடந்த சனிக்கிழமை அன்று  பூண்டுலோயா விவேகானந்தா மகா வித்தியாலய அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு தலைவர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் மற்றும் ஒஸ்கார் பிரதிநிதி வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் .

அங்கு அவர் மேலும் பேசுகையில் ..

கல்வி என்பது தகவல்களை சேகரிப்பது அல்ல. அப்படியானால் நூலகங்களும் புத்தகங்களும் அறிவாளிகளாக இருந்திருக்கவேண்டும். இன்றைய அலைபேசிகள் கணனிகள் அறிவாளிகளாக இருக்க வேண்டும். அப்படி இல்லை.
 நாம் இயந்திரங்களுடன் போட்டி போடக்கூடாது. அன்னப் பறவை போல், தேவையற்ற தகவல்களை தவிர்த்து சரியான தேவையான தகவல்களை உள்வாங்கி நமது முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். 
இங்கு நிறுவப்பட்டிருக்கும் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் இலங்கையின் முதல் ராமகிருஷ்ண மிஷன் துறவி சுவாமி விபுலானந்தரின் சிலைகள் உங்களுக்கு தினமும் பல நல்ல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கும் .அந்த வழிகாட்டல்களை ஏற்று நமது வாழ்வை வளப்படுத்த வேண்டும். என்ற 

ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ்  பேசுகையில் .


நாம் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டிய தேவை இருக்கின்றது. ஒரு சிறிய அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் திணறுகின்றோம். அண்மையில் ஏற்பட்ட பேரிடரிலே மலையகத்திற்கு நாங்கள் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் 3300 குடும்பங்களுக்கு உதவி செய்தோம் .
இங்குள்ள குழந்தைகள் கல்வியை இடையறாது கற்க வேண்டும். நாடளாவிய கல்வி மற்றும் நிர்வாக சேவையிலும் இணைய வேண்டும் .

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனித வளர்ச்சியில் தங்கி இருக்கின்றது. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் மாணவரிடையே பயமின்மையை ஊட்ட வேண்டும் என்றார்.