ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றித் தொடரும்- வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

 


அரகலய' போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருக்கின்றது என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், தோல்வியுற்ற அரசியல்வாதிகளின் விரக்தியையே காட்டுகின்றன என்று தேசிய மக்கள் சக்தி அரசு பதிலடி கொடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-

அரகலய என்பது வெளிநாட்டு நிதியில் இயங்கியது அல்ல; அது ராஜபக்ஷக்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் பட்டினியால் வாடியபோது வெடித்த தன்னிச்சையான மக்கள் எழுச்சியாகும். 

எரிபொருள் வரிசைகளிலும், மின்சாரத் தடையிலும் மக்கள் அவதிப்பட்டபோது இந்த 'தேசப்பற்று' எங்கே போனது? மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதனை வெளிநாட்டுச் சதி என்று கூறுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்த விசாரணைகளை எமது அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திருடப்பட்ட தேசிய சொத்துக்களை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்கும், மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குமே நாமல் ராஜபக்ஷ இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறி வருகின்றார்.

கடந்த 'அரகலய' போராட்டத்தின் போது அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மீது குண்டர் தாக்குதல்களை ஏவிவிட்டது யார் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். அன்று அதிகாரத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை ஒடுக்கியவர்கள், இன்று அவர்கள் மீது ஆணைக்குழு அமைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது. 

நாம் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அல்லது அடக்குமுறைக்கும் அஞ்சப்போவதில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றித் தொடரும். - என்றார்.