மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (07) மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கும் தங்களது சேவைகளை சிறப்பாக வழங்கி ஓய்வுபெற்ற மற்றும் வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று கடமைகளை ஆற்றிவருகின்ற சிரேஸ்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிச்சங்க போசகரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
மெளன இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது நலன்புரிச்சங்க தலைவரும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வரவேற்புரையினை தொடர்ந்து உடலுக்கும் மனதிற்கும் வலிமை சேர்க்கும் வண்ணமாக உத்தியோகத்தர்களிடையே பல கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரின் உரை, நினைவு உரைகள் என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்விற்கு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற மற்றும் வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சிரேஸ்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கௌரவிக்கப்பட்டவர்களின் ஏற்புரையும் இடம் பெற்றிருந்தன.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக முன்னாள் பிரதம கணக்காளர்களான எம்.எஸ். பசீர், மாவட்ட செயலகத்தின் முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண சிரேஸ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன், முன்னாள் சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





