அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள், அனைத்து வகையான சளி, இருமல், காய்ச்சல் மற்றும்
நுரையீரல் தொற்று பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஒரே ஒரு 'மூக்கு
வழி தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.
தடுப்பு மருந்து வரலாற்றில் கடந்த 200
ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த முறையை விட இது முற்றிலும் மாறுபட்டது என
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வழக்கமான தடுப்பு மருந்துகள் ஒரு
குறிப்பிட்ட நோய்க்கிருமியை, உதாரணமாக தட்டம்மை அல்லது சின்னம்மை
எதிர்த்துப் போராட உடலைப் பழக்கும்.
ஆனால் இந்த புதிய முறை மூக்கு வழியாகச்
செலுத்தப்படும் போது, அது, நுரையீரலில் உள்ள 'மேக்ரோபேஜஸ்' எனப்படும்
வெள்ளை இரத்த அணுக்களை தீவிர விழிப்புணர்வு நிலையில் வைக்கிறது.
இதன் மூலம், எந்த வகையான வைரஸ் அல்லது
பக்டீரியா உடலுக்குள் நுழைய முயன்றாலும், இந்த கலங்கள் உடனடியாகச்
செயல்பட்டு அவற்றைத் தடுக்கும்.
இந்தத் தடுப்பு மருந்து இன்ஃப்ளூயன்ஸா,
கோவிட் போன்ற வைரஸ்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், Staphylococcus aureus
மற்றும் Acinetobacter baumannii போன்ற ஆபத்தான பக்டீரியாக்களுக்கு
எதிராகவும் விலங்கு சோதனைகளில் 100 முதல் 1000 மடங்கு வரை வைரஸ் பரவலையும்
குறைத்துள்ளது.
ஒவ்வாமை மற்றும் ஆஸ்மா பாதிப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின்
நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தித் துறை பேராசிரியரான
இலங்கையில் பிறந்த பாலி புலேந்திரன் இது குறித்துக் கூறுகையில், இதுவரை
இருந்த தடுப்பு மருந்து கொள்கைகளில் இருந்து இது ஒரு தீவிரமான விலகல் என்று
தெரிவித்துள்ளார்.
இது வெறும் குறிப்பிட்ட வைரஸ்களை
மட்டும் தடுக்காமல், தாம் சோதித்த கிட்டத்தட்ட அனைத்து வைரஸ்கள் மற்றும்
பக்டீரியாக்களுக்கு எதிராகப் பாதுகாப்பளிக்கிறது. என்று
குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விலங்குகளிடம் மட்டுமே
சோதிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து, விரைவில் மனிதர்களிடம்
மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை நோய் எதிர்ப்பு மண்டலத்தை எந்த
நேரமும் தீவிர நிலையில் வைத்திருப்பது உடலுக்கு ஏதேனும் பக்கவிளைவுகளை
ஏற்படுத்துமா என்ற சந்தேகம் சில ஆராய்ச்சியாளர்களால் எழுப்பப்பட்டுள்ளது.
source - BBC
source - BBC





