அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


வெரிட்டே ரிசர்ச் (Verité Research) அமைப்பின் சமீபத்திய கலப் (Gallup) முறையிலான ‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பில், 2026 பெப்ரவரி தொடக்கத்தில் அரசாங்கத்தின் மீதான அங்கீகார விகிதம் 65% ஆக பதிவாகியுள்ளது. ±3 சதவீத புள்ளி பிழை வரம்புடன், இந்த அங்கீகார விகிதம் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 62% லிருந்து புள்ளிவிவர ரீதியாக நிலையானதாக உள்ளது. இதன் கள ஆய்வு பங்காளராக வன்கார்ட் சர்வே (Vanguard Survey (Pvt) Ltd) நிறுவனம் செயல்பட்டது.

அரசாங்கத்தின் மீதான அதிருப்தி விகிதம் குறைவாக உள்ளதுடன், 2025 பெப்ரவரியில் இருந்த முன்னைய கருத்துக்கணிப்பில் இருந்து மாற்றமின்றியும் காணப்படுகிறது.

 இந்தக் கருத்துக்கணிப்பின் நான்கு ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, தற்போதைய பொருளாதார நிலைமைகளை “நல்லது” அல்லது “மிகச்சிறந்தது” என்று மதிப்பிட்டவர்களின் எண்ணிக்கை, “மோசமானது” என்று மதிப்பிட்டவர்களை விட அதிகமாகக் காணப்படுகிறது.

பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த கருத்துகளும் முன்னேற்றம் கண்டுள்ளன. பொருளாதாரம் “முன்னேற்றமடைந்து வருகிறது” என்று கூறுபவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு காணப்பட்ட 55% லிருந்து 64% ஆக அதிகரித்துள்ளனர். பொருளாதாரம் “மோசமடைந்து வருகிறது” என்று கூறியவர்களின் விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லை. கருத்து தெரிவிக்காதவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, இது நாட்டின் பொருளாதார திசை குறித்து அதிகமான மக்கள் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பதைக் வெளிக்காட்டுகிறது.

பொருளாதாரம் தொடர்பான அனைத்துக் கருத்துக்களும் ஒன்றிணைக்கப்பட்டு, மைனஸ் 100 முதல் +100 வரையான வீச்சைக் கொண்ட ஒரு பொருளாதார நம்பிக்கைச் சுட்டெண்ணாகத் (Economic Confidence Index) தொகுக்கப்படுகின்றன. இச் சுட்டெண் +36 ஆகப் பதிவாகியுள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்னர் காணப்பட்ட +14 உடன் ஒப்பிடும்போது பாரிய முன்னேற்றமாகும்.

அத்துடன், ஒரு பெரும்பான்மையானவர்கள் (59%) நாட்டில் “காரியங்கள் நடக்கும் விதம்” குறித்து திருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகால கருத்துக்கணிப்பில் திருப்தி நிலைகள் 50% க்கும் அதிகமாக உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

தற்போதைய அரசாங்கமானது, கடந்தகால அரசாங்கங்களுடன் ஒப்பிடப்பட்ட பல்வேறு அம்சங்களில், ஊழலைக் குறைப்பதை விடவும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களைக் குறைப்பதற்கே அதிக நேர்மறையான மதிப்பீடு கிடைத்துள்ளது.

வழக்கமாக நடத்தப்படும் இந்த ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பு, வெரிட்டே ரிசர்ச் அமைப்பின் பரந்துபட்ட அரசியல் விளக்கங்களுக்கு வலுச்சேர்க்கின்ற ஒரு அங்கமாகும்.

இந்த பொறிமுறையானது ஏனைய நிறுவனங்களும் இலங்கை மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக தங்கள் கேள்விகளைச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்த மேலதிக விவரங்கள் சேவைபெறுவோருக்கு கிடைக்கின்றன.

இச் சமீபத்திய கருத்துக்கணிப்பானது 2026 ஜனவரி 24 முதல் 2026 பெப்ரவரி 03 வரை, தனித்தனிக் குடும்பங்களைச் சேர்ந்த 1,048 இலங்கையைச் சேர்ந்த பெரியவர்களிடம் தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட, பல கட்ட, சீரற்ற மாதிரி முறையில் நடத்தப்பட்டது. இது 95% நம்பிக்கை மட்டத்தில் அதிகபட்சமாக ±3.0 சதவீத புள்ளி (pp) மாதிரி பிழை வரம்பைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமுலாக்கச் செயல்பாட்டில் ஏற்படக்கூடிய குறைபாடுகளால் இந்தப் பிழை வரம்புகளில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தகூடும்.