மின்வேலிகளையே தகர்த்துக்கொண்டு மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்துக்குள் நுழைந்த யானைகள் -பெரும் அச்சத்தில் மக்கள்.

 

 


 

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு  பகுதியில், மின்வேலியைத் தகர்த்துக்கொண்டு நூற்றுக்கணக்கான யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளமையால் கிராம மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று கரடியனாறு  பகுதியில் அமைக்கப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்வேலியை யானைக்கூட்டம் ஒன்று வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு ஊருக்குள் நுழைந்துள்ளது. 

நூற்றுக்கணக்கான யானைகள் இவ்வாறு ஒரே நேரத்தில் ஊருக்குள் உலா வருவதைக் கண்ட கிராம வாசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே தாம் வாழ்ந்து வருவதாகக் கவலை தெரிவிக்கும் மக்கள், இந்த பாரிய யானைக்கூட்டத்தின் வருகையால் தமது உயிருக்கும் உடமைகளுக்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்..

இப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக யானைகளின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இருப்பினும், மின்வேலிகளையே தகர்த்துக்கொண்டு யானைகள் வருவதால், இதற்கொரு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.