இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தின நிகழ்வு நேற்று (04) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில், பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக பிரதேச செயலாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் பிரதேச செயலாளரின் சுதந்திரதின உரையில் “தாய் நாட்டின் வளர்ச்சிக்காகவும் குறிப்பாக எமது பிரதேச மக்களின் வளர்ச்சிக்காக அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து சேவையினை வழங்கி இப்பிரதேசத்தினை வளர்ச்சியடைந்த பிரதேசமாக மாற்ற உழைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
தொடர்ந்து 78 வது சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு கிளீன் ஶ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளர் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





