இலங்கையில் 4,700-க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி. தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது .

 


 

 

 இலங்கை முழுவதும் தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தின் கீழ் 41 சிகிச்சை நிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

அமைச்சரின் கூற்றுப்படி, தற்போது இந்த சிகிச்சை நிலையங்களில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றாளர்கள் 4,771 பேரும் சிபிலிஸ் நோயாளர்கள் 1,469 பேரும் ஹெர்பிஸ் நோயாளர்கள் 2,891 பேரும் சிகிச்சைப் பெற்ற வருகின்றனர்.

மேலும், எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் மருந்துகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தற்போது 36,421 மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகவும், அந்த கையிருப்பு அடுத்த நான்கு மாதங்களுக்கு போதுமானது என்றும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்

உலகளாவிய நிதி மற்றும் இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் ஆகியவற்றின் நன்கொடை மற்றும் அரச நிதியுதவியின் மூலம் இந்த மருந்துகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

உலகளாவிய நிதியத்திலிருந்து மருந்துகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, முன்னதாக மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் ஒரு மாத காலத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது மருந்துத் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும், புதிய மருந்துகள் கிடைத்தவுடன் மீண்டும் மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை ஒரே தடவையில் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.