இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு ஜயந்தியா ஹில்ஸ் (East Jaintia Hills) மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கமொன்றில் நேரிட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி குறைந்தது 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை 11:00 அளவில் சுரங்கத்தினுள் பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் சுரங்கத்தினுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
படுகாயமடைந்த ஒரு தொழிலாளர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்ட 'எலி வலை' (Rat-hole mining) முறையிலேயே இந்தச் சுரங்கம் இயங்கி வந்துள்ளது.
குறுகிய குகை போன்ற அமைப்பில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி நிலக்கரி எடுக்கும் இந்த அபாயகரமான முறை தடை செய்யப்பட்டிருந்தும், அந்த பகுதியில் ரகசியமாகத் தொடர்வது இந்த விபத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சுரங்கத்தின் உரிமையாளர்கள் இருவர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





