இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை யொட்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்தகுளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்த பயணத்தை இன்றைய தினம் மன்னாரில் நிறைவு செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி காலை 8.45 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.
வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி தொடர்ச்சியாக கடந்த காலங்களில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை நாட்டின் 78 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கர நாற்காலியூடாக இலங்கை பூராகவும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ள தோடு, குறிப்பாக இலங்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மனிதாபினான உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளும் வகையிலும் புலம்பெயர் உறவுகளும் உதவிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கை மக்கள் அனைவரும் அனர்த்தத்தின் போது எவ்வித வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், சமூக நல்லெண்ணத்தையும் நோக்காக கொண்டு குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
மேலும் படித்த மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ளனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் சுமார் 1500 கிலோ மீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரமாக குறித்த பயணம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சென்று, அங்கிருந்து இறுதியாக மன்னாருக்கு தனது பயணத்தை மேற்கொண்டு இன்றைய தினம் காலை 10 மணி அளவில் மீண்டும் மன்னார் பஜார் பகுதியை வந்தடைந்தார்.
அவருக்கு மன்னார் மக்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் உள்ளடங்களாக பலர் மாலை அணிவித்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.





