மட்டக்களப்பு உலக இரும்பரசன் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் அவர்களின் 123 வது ஜனன தினம் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தால் இன்றைய தினம் -2026.02.05 முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்முனை பிரதான வீதி நொச்சிமுனையில் அமையப்பெற்ற அன்னாரின் திரு உருவச்சிலைக்கு பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தின் முகாமையாளர் T. ஸ்ரீஸ்கந்தராஜா, விளையாட்டு கழகத்தின் தலைவர் S. பார்த்தீபன் , விளையாட்டு கழகத்தின் செயலாளரும் பயிற்றுவிப்பாளருமான V. திருச்செல்வம் மற்றும் கழக உறுப்பினர்களால் மாலை அணிவித்து 123 வது ஜனனதினம் அனுஸ்டிக்கப்பட்டது
. .
தேகப்பியாசம், மனஅடக்கம், ஆத்மீகம், தியானம், விடாமுயற்சி என்பன மூலமாக இரும்பரசனாக திகழ்ந்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினால் இவருக்கு உடற்பயிற்சி பேராசிரியர் பட்டம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆத்மீகத் துறையில் மிக ஆழமாக ஈடுபாடு கொண்டவர்.
கதிர்காமத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “மட்டக்களப்பு திருவிழா” என தனித்திருவிழா ஒன்றையும் வருடா வருடம் நடாத்தி வந்த பெருமையும் இவரைச் சாரும்.
பச்சிலை வைத்தியம், எலும்புமுறிவு வைத்தியம், நரம்பு வைத்தியம் — இவையனைத்திலும் திறமைசாலியாகவும் திகழ்ந்தார்.
பினாங் நகரில் மாபெரும் மல்யுத்த வீரர் ஜீவான் என்பவருடன் மோதி அவரைத் தோற்கடித்து வெற்றி கொண்டதன் மூலம் “மல்யுத்த மன்னன்” என்ற விருதும் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார்.
1931ம் ஆண்டு கொழும்பில் அன்றிருந்த மகா தேசாதிபதி சர் ஸ்டான்லி என்பவர் முன்னிலையில் வீரதீர சாண்டோ நிகழ்ச்சிகளைக் காண்பித்து
“ஐயன் கிங் ஒப்பி சிலோன்” – இலங்கையின் இரும்பரசன் என்ற விருதினையும் தங்கப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.
1945ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கத்துடன் மோதி அதன் வாயைக் கிழித்து மரணமடையச் செய்தார்.
எஸில்க் தரைப்படையணிக்கு உடற்பயிற்சி போதனாசிரியராகக் கடமையாற்றியதனால் “உடற்பயிற்சி பேராசிரியர்” என தரைப்படை ஆணையாளரால் 1945.04.20 இல் இவர் கௌரவிக்கப்பட்டார்.
வல்வெட்டித்துறையிலிருந்து தனி வேப்பமரத்தினால் செய்யப்பட்ட 40 அடி நீளமான “அன்னபூரணி அம்மாள்” என்ற கப்பலை அமெரிக்கக் கோடீஸ்வரர் ரொபின்சன் அவர்கள் தனது நாட்டுக்குக் கொண்டு செல்வதற்கு, மாலுமிகளில் ஒருவராக சாண்டோ சங்கரதாஸையும் சேர்த்துக் கொண்டார்.
இதன் மூலம் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவுக்கு கப்பலோட்டிய தமிழராக சாண்டோ சங்கரதாஸ் புகழ் பெற்றார்.
இவர் சாண்டோ கலையையே மட்டுமன்றி ஜூடோ, கராத்தே, மல்யுத்தம், சிலம்பம், சீனடி, மர்ம நரம்பு விளையாட்டுக்களிலும் மிகத் தேர்ச்சி பெற்றார்.
மகாத்மா காந்தி, மைசூர் மகாராசா ஆகியோராலும் இவர் கௌரவிக்கப்பட்டார்.
இரும்பரசன் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் அவர்கள் இறுதிவரையும் மதுவையும் புகைத்தலையும் தவிர்த்து வந்தார்.
1969.04.26 அன்று தனது 65வது வயதில் காலமானார்.
இவரைப் பற்றி “இரும்பரசன்” எனும் நூல் க.தா.செல்வராசா அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
சாண்டோ அவர்களின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு ஆரையம்பதியிலும் சிலை வைக்கப்பட்டுள்ளது
அபூர்வ கலைஞரான சாண்டோ சங்கரதாஸ் “உலக நாயகன்” என்று போற்றப்பட வேண்டியவர்
அவர் நாமம் உலகம் வாழும் வரை வாழும்.














