மடடக்களப்பு நாவற்குடா தூய சின்ன லூர்து அன்னை திருத்தலத்தின் 118வது வருடாந்த ஆலய திருவிழாவானது 15.02.2026 அன்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியானது நிர்மாணிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு (1966 - 2026 ) வைரவிழா யூபிலி திருவிழாவாகவும் இது அமைந்திருந்தது.
இத்திருவிழாத் திருப்பலியானது , மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளார் தலைமையில் , நாவற்குடாப் பங்குத்தந்தை அருட்பணி. A. ஜேசுதாசன் அடிகளாரும் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத்திருவிழாத் திருப்பலியிலே ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு லூர்து அன்னையின் ஆசீரைப் பெற்றனர்.நாவற்குடா வாழ் இறைமக்கள் மட்டுமன்றி ஏனைய வெளிப்பங்குகள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் இறைமக்கள் லூர்து அன்னையின் தரிசனத்தை நாடி தேடி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்திருவிழாத் திருப்பலியின் நிறைவில், அன்னையவரின் திருச்சொரூபமானது பக்தர்கள் புடைசூழ, அன்னையின் கெபியினைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கெபி நிர்மாணிக்கப்பட்டதன் 60 வது ஆண்டு நிறைவு வைரவிழா யூபிலி கொண்டாட்டத்தின் நினைவுக் கல்லானது , மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு இனிதே திறந்துவைக்கப்பட்டது .
இறுதியாக லூர்து அன்னையின் இறுதி ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன் , கொடிகள் இறக்கப்பட்டு, அன்னையின் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு, நாவற்குடா தூய சின்ன லூர்து அன்னையின் 118வது ஆலய திருவிழாவானது இனிதே நிறைவுபெற்றது




