இராமகிருஷ்ண மிஷனின்
விழிப்புலனற்றோருக்கான சேவையில் இந் நவீன இயந்திரம் புதிய மைல்கல் எனலாம்.
அந்தவகையில் தற்போது புதிதாக, Braille அச்சுடன் Tactile (தொடுதிறன் அடிப்படையிலான) அச்சையும் ஒருங்கிணைத்து தயாரிக்கக்கூடிய ROMEO 60 – Tactile & Braille Printer எனும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட அச்சு இயந்திரமும் பெறப்பட்டுள்ளது .
இந்த நவீன இயந்திரத்தின் திறப்பு விழா மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன், பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் மஹராஜின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனை ராமகிருஷ்ண மிஷன், இலங்கைக்கான தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மஹராஜ் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விழிப்புலனற்றோருக்கான ஒருங்கிணைந்த வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (Inclusive Resource and Training Centre – IRTC) தனது சேவைகளில் புதிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
IRTC ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், விழிப்புலனற்ற மாணவர்களுக்காக கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுயமேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் Braille நூல்கள், எழுத்துமூலக் கற்கை வளங்கள், தொழில்நுட்ப பயிற்சிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் ஒலி வடிவ புத்தகங்கள் என தொடர்ச்சியான சேவைகளை ஆற்றிவந்துள்ளது.
அதன் முதல் படிக்கல்லாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் பெறப்பட்டு அதன் மூலமாக
தரம் 10, 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்கள்
• தமிழ்
• தமிழ் இலக்கியத்தொகுப்பு
• ஆங்கிலம்
• வரலாறு
• விஞ்ஞானம்
• சைவநெறி
தமிழ் வார்த்தை தேடல் புதிர்கள்
கணிதப் பெருக்கல் அட்டவணை
விஞ்ஞான ஆவர்த்தன அட்டவணை
விழிப்புல மாற்றாற்றல் உடையோரின் வாழ்வில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு
எனும் நூல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
இது விழிப்புலனற்றோரின் கல்வி வளர்ச்சியில் அடித்தளமாக அமைந்தது.
மற்றும் IRTCயின் சேவைகள் மையத்திற்குள் மட்டுமல்லாது, பிரதேச செயலகங்களுக்கு நேரடியாக சென்று, விழிப்புணர்வு கலந்துரையாடல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் சமூகத்தில் விழிப்புலனற்றோர் குறித்த புரிதலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் வளர்கிறது. இவ்வாறு, சமூகத்தின் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், விழிப்புலனற்றோரின் திறன்களை சரியாக புரிந்து கொள்ளவும், அவர்களை சமத்துவமாக சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படும் IRTC, எதிர்காலத்திலும் விழிப்புலனற்றோரின் வாழ்வில் நல்ல மற்றும் நிலையான மாற்றங்களை உருவாக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்பது உறுதி என்கிறார் சுவாமி.
( வி.ரி. சகாதேவராஜா)





