தழிழர் வாழ்வியலில் தைப்பொங்கல் .

 




பாக்கியராஜா மோகனதாஸ்.(நுண்கலைமாணி)
துறைநீலாவணை
 
தைப்பொங்கல் ஆண்டு தோறும் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலானது அறுவடைத்திருநாள் ,தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. தைத்திருநாள் கொண்டாட்டம் சுமார் ஆயிரம் வருடங்கள் பழமையானது. 

*
தைப்பொங்கல் சூரியனின் இயக்கத்தோடு தொடர்புடையது என்பதால் நம் முன்னோரின் வானியல் அறிவுக்கும் மிகச்சிறந்த சான்றாக விளங்குகின்றது. 

*
தைப்பொங்கலானது சங்க கால தைந்நீராடலிலிருந்து தோற்றம் பெற்றதாக கூறப்படுவதுடன் மாதங்களுள் தை மாதம் சிறப்புப் பெற்ற மாதமாகவும் சுப காரியங்களை தொடங்கும் காலமாகவும் அமைகிறதென்பதும் 
குறிப்பிடத்தக்கது.


சூரியனின் உத்தராயண செல்கையே தைத்திருநாளாக, தைப்பிறப்பாக 
கொள்ளப்படுகிறது. சூரியனுக்கும் இயற்கைக்கும் பூச்சி புழு உட்பட
அனைத்து உயிர்களுக்கும் நன்றி கூறுகின்ற தினமாக இருப்பதினால் சிவபெருமானின் நெற்றிக்கண் சூரியன் என்றுகூட
கூறப்படுகின்ற ஐதீகமும் உண்டு. கடவுளர்களுக்கும் உயிர்களுக்கும் அறிவியல் தொடர்பான விளக்கத்தை எடுத்துக்காட்டி வாழ வைப்பதே சமயம். இந்த சமய வாழ்வு ஓர் ஒளி மூலமே ஆரம்பமாவதுடன் வாழ்வும் வளமும் பிரகாசமாகின்றது. 

இயற்கையுடன் ஒன்றிணைந்தே வாழ வேண்டும். அந்த இயற்கையை அழித்து அதை எமக்கு அடிமையாக மாற்றிக்கொள்ளக்கூடாது என்ற கருத்து தைப்பொங்கல் மூலமாக ஆழமாக வெளிப்படுகின்றது. இயற்கை மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தின் ஊடாக தைப்பொங்கல் உட்பட தமிழர் பண்டிகைகள் எம்மிடையே பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.

நமது வாழ்வுக்கு வளம் சேர்க்கும் சூரியனின் தேவையுணர்ந்து நன்றிக்கடன் செலுத்த வேண்டும். அந்த வகையில் இயற்கையான பகலவனுக்கும் பூமிக்கும் எருது பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக தைப்பொங்கலும் அதனையடுத்து பட்டிப்பொங்கலும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

தை மாதப் பிறப்பன்று சூரியன் தனு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் தைப்பொங்கலை மகர சங்கிராந்தி என்று கூறுவர். பகலவன் தையிலிருந்து ஆனி மாதம் வரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்தராயனமென்றும் ஆடி முதல் மார்கழி வரை பயணிப்பதை தட்சிணாயனம் என்றும் கூறப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன் அல்லது பரிதி தனு ராசியிலிருந்து மகர ராசியில் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் தொடங்குவதே மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. 

சூரிய புராணத்தில் சூரியனுக்கு பன்னிரு சிறப்பு பெயர்களையும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிப் பயணிக்கின்றான் என்றும் கூறப்படுகிறது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் உலகம் உவப்ப புதிருதரு பகல் பல புகழ் ஞாயிறு என்றும் சிலப்பதிகாரத்தில் ஞாயிறு போற்றுது மித்திரன் என்றும்
அழைக்கப்படுகிறது.

பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரும் சூரிய சக்தியினாலே இயங்குவதுடன் அச்சக்தியே அடிப்படையாகவும் அமைகிறது. அவ்வாறான சூரியன் மார்கழி மாதத்தில் நமக்கு குறைந்த அளவிலும் தை மாதத்தில் நிறைவாகவும் கிடைக்கின்றது. சூரியனில்லாமல் பயிர் எவ்வாறு செய்வது , உயிர்களை எவ்வாறு வளர்ப்பது. அதனாலேதான் தை மாதம் முதலாம் திகதியினை இயற்கையின் திருநாளாக கொண்டாட விழைகிறோம்.

மார்கழி மாத கடைசி தினத்தன்று வாழ் இடங்களை தூய்மைப்படுத்தி தேவையற்ற பழையவற்றை எரிப்பதே போகிப் பண்டிகையாக அமைகிறது. தைப்பொங்கலின் இரண்டாம் நாள் பட்டிப்பொங்கல் எனப்படும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுத் தொழுவங்கள் ,மாடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு சந்தனம் ,குங்குமம் ,விபூதி,சலங்கைகள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மாடுகள் கொளரவிக்கப்படுகின்றன. விலங்கு வேளாண்மை விவசாயத் தொழில் மற்றும் ஜீவனோபாய உற்பத்தியைத்தரும் பட்டிகள் கெளரவிக்கப்படும் நாளாக பட்டிப்பொங்கலுள்ளது. தைப்பொங்கல் போன்று பொங்கல் படைத்து பட்டிகளுக்கு வழங்கப்படுவதே பட்டிப்பொங்கலாக அமைகிறது.

மஞ்சள் தோரணங்கள் கட்டி புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படுவதே தைத்திருநாளின் முதன்மையான அம்சமாகும். தைப்பொங்கல் ஆண்டு தோறும் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலானது அறுவடைத்திருநாள் ,தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. தைத்திருநாள் கொண்டாட்டம் சுமார் ஆயிரம் வருடங்கள் பழமையானது.

தைப்பொங்கலன்று அதிகாலை எழுந்து நீராடி புதிய 
உடைகள் உடுத்து வீட்டின் முற்றத்தில் கோலமிட்டு முற்றத்து வெளியில் புது மண் பானையில் புது அரிசியிட்டு பொங்கல் செய்யப்படுகிறது. சூரியோதயத்துக்கு பின் சர்க்கரை மற்றும் வெண்பொங்கல் செங்கரும்பு, புது மஞ்சள், பனங்கிழங்கு ,பழ வகைகள் ஆகியவற்றை உழவுத்தொழிலுக்கு உதவிய உதயசூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக படைத்து எங்கும் மகிழ்ச்சி பொங்கிப் பெருக ஆலய வழிபாடு எங்கும் நடாத்தப்படுகிறது.

தமிழர் திருநாள் என்று நாம் போற்றுகின்ற தைப்பொங்கலானது மகர சங்கிராந்தி என்ற பெயரில் ஏனைய இனக்குழுமங்கள் மத்தியில் வழக்கத்தில் இருக்கிறது. தைப்பொங்கல் சூரியனின் இயக்கத்தோடு தொடர்புடையது என்பதால் நம் முன்னோரின் வானியல் அறிவுக்கும் மிகச்சிறந்த சான்றாக விளங்குகின்றது. 

தைஇத் திங்கள் தண்கயம் படியும் என்று நற்றிணையிலும் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் என்று குறுந்தொகையிலும் தைஇத் திங்கள் தண்கயம் போல் என்று புறநானூற்றிலும் தைஇத் திங்கள் தண்கயம் போல என்று ஐங்குறுநூறிலும் தையில் நீராடி தவம் என தலைப்படுவாயோ என்று கலித்தொகையிலும் கூறப்படுகிறது. இவை சங்ககால இலக்கிய செய்யுள் மரபுகளுக்கூடாக வெளிப்படுகின்றது. ஆகவே
தைப்பொங்கலானது சங்க கால தைந்நீராடலிலிருந்து தோற்றம் பெற்றதாக கூறப்படுவதுடன் மாதங்களுள் தை மாதம் சிறப்புப் பெற்ற மாதமாகவும் சுப காரியங்களை தொடங்கும் காலமாகவும் அமைகிறதென்பதும் 
குறிப்பிடத்தக்கது.

தை மாதம் சங்க காலம் தொட்டே நோன்புக்குப் புகழ்பெற்று விளங்கிய மாதம். இன்றைய தைப்பொங்கலுடன் எவ்வித நேரடித்தொடர்பும் இல்லை என்றாலும் ஒரு மாத காலம் நீடித்த “தைந்நீராடல்” என்ற பெண்கள் நோன்பு பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பு உண்டு. இதுவே பின்னாளில் பாவை நோன்பாகவும் தைப்பூசமாகவும் உருத்திரிந்தது. 

பாவை நோன்பு சார்ந்ததாக ஆண்டாள் பாடுகின்ற “பாற்சோறு மூட நெய் பெய்து” என்று திருப்பாவையில் வருகின்ற குறிப்பே பொங்கல் உணவு பற்றிய மிகப்பழைய தமிழ்க் குறிப்பாகக் கருதப்படுகிறது. எனினும் 'பொங்கல்' என்ற சொல் பழந்தமிழைப் பொறுத்தவரை கொதித்தல், நிறைதல், பொங்க வைத்தல், பொங்கி வெளியேற்றுதல்  
என்ற பொருளிலேயே எடுத்தாளப்பட்டுள்ளது. அது உணவுப்பண்டத்தின் பெயராக முதலில் இடம்பெறுவது சீவக சிந்தாமணியில் தான். அதன் காலத்தை அண்டி சோழர் காலக் கல்வெட்டுக்களில் “புதுயீடு” என்று குறிப்பிடப்பட்டுள்ள உழவுத்திருநாளே தைப்பொங்கலின் பழைய வடிவம். 

மகர சங்கிராந்தி பற்றிய பழைமை வாய்ந்த இலக்கியச் சான்றுகள் வேற்று மொழிகளிலும் கிடைத்திருப்பதால் தைப்பொங்கல் தொன்மை வாய்ந்த பண்டிகை என்பதை எம்மால் ஊகித்துக்கொள்ள முடிகின்றது .

மனிதர்கள் தங்களது கடமைகளை தவறாது அன்றென்று செய்து கொண்டிருப்பது போல விலங்குகள் பறவைகள், மரம், பூ, நீர் போன்ற இயற்கைகள் அத்தனையும் மனிதனுக்கு உதவுகின்றது. தேவதையாக இருக்கின்ற இயற்கைகள் கேட்காமலேயே விரும்பிய போகங்களை கொடுக்கின்றன. இவை எல்லாவற்றையும் நினைவில் வைத்து நாம் நன்றி செலுத்த வேண்டும். இவ்வாறு நன்றி செலுத்தாவிட்டால் அல்லது அர்ப்பணம் செய்யாமல் நாங்கள் அனுபவித்தால் அனுபவிப்பர்களை திருடன் என்கிறது பகவத் கீதை.

இயற்கையாக இயற்கையிலிருந்து கிடைப்பவற்றை தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்யாமல் நாங்கள் அதை முதலாவதாக உண்ணுவோமானால் திருடர்கள் என்றும் அர்ப்பணம் செய்து எஞ்சியவற்றை உண்பதனால் நாங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றோம் என்கின்ற பேர் உபகாரமும் எங்களுக்கு கிடைக்கின்றது நம்முடைய உடலைப் பேணுவதற்காக உடம்புக்காக சமைத்து உண்ணுகின்ற உணவை பாவமாகவும் எண்ணுகின்றது கீதை. இது தொடர்பாக
பகவத் கீதையின் மூன்றாவது அத்தியாய 12 ஆவது சுலோகத்தில் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு, இலங்கை ,மலேசியா, சிங்கப்பூர் ,ஐரோப்பிய நாடுகள், மொரிசியசு, வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய தமிழர் வாழுகின்ற நாடுகளில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜீவனோபாய உற்பத்தி உபரியை பெறுவதற்கு அடித்தளமாய் அமைந்த
இயற்கையுட்பட அனைத்து உயிர்களும் வளம் பெறும் பொருட்டே தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. சூரியனின் சுழற்சியும் அதனால் உயிரினங்கள் தாவரங்கள் மனிதர்கள் அடைந்த வினைப் பயன் கருதியுமே தைப்பொங்கலானது உலகவாழ் தமிழர்களால் சங்ககாலத்திலிருந்து இற்றை வரைக்குமாக கொண்டாடப்படுகிறது என்றால் மிகையாகாது.