கோவீ.ராஜேந்திரன்-TAMIL NADU
பெண்கள் வெளியே வந்து பாடுவதை குற்றமாக கருதிய குடும்பத்தில் பிறந்து புகழ்பெற்ற பாடகியானவர் டி.கே.பட்டாம்மாள். இந்தியா சுதந்திரம் பெற்றதை "ஆடுவோமே பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று..." என்று பாடி முதல் முறையாக சுதந்திர தின செய்தியை அகில இந்திய வானொலியில் அறிவித்தவரும் இவரே. மிகச்சிறிய வயதிலேயே மேடையில் கச்சேரி செய்தவர். இவருக்கு மிருகங்கள் மீது நிறைய பிரியம். அதனால் அவர் 10 பசுமாடுகளையும்,10 நாய்களையும் வளர்த்து வந்தார்.
'சங்கீத கலாநிதி' விருது பெற்ற முதல் இளம் வயது பெண் என்ற பெருமையைப் பெற்றவர் எம்.எல்.வசந்த குமாரி. "ராகங்களின் அரசி" எனப் புகழப்பட்டவர். திரைப்படங்களில் 150 பாடல்கள் பாடியவர். உள் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர். இந்தியா- சீனா போரின் போது தான் அணிந்திருந்த நகை முழுவதையும் நம் நாட்டு நல நிதிக்கு வழங்கியவர்.
கர்நாடக சங்கீதத்தில் கொடி கட்டிப் பறந்த மூன்று பெண்களில் ஒருவர் என்.எஸ்.வசந்த கோகிலம் (மற்ற இருவர் டி.கே.பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலட்சுமி). திரைப்படங்களில் நடித்தும், பாடியும் உள்ளனர். பாடகிகளுக்கான பரிசை வென்ற முதல் பாடகி இவர் தான்.1938 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'மெட்ராஸ் மியூசிக் அகடமி' மாநாட்டில் இவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், 32 வயதிலேயே காலமானார். காசநோயால் இறந்து போனார் என்பதால், தான் இசை மூலம் சம்பாதித்த சொத்துக்களை காசநோய் மருத்துவ மனைக்கு எழுதி வைத்து விட்டு இறந்து போனார்.
கர்நாடக இசைத்துறையில் புகழ் பெற்ற பாடகராகவும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி என்று பல மொழிகளில் பாடல்களைப் பாடி, இசையரசி, இசைப் பேரரசி, இசைக்குயில், இசை ராணி என்று பலராலும் இன்றும் அழைக்கப்படுபவர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஐக்கிய நாடுகள் அவையில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். போப் ஆண்டவர் முன்னிலையில் பாடல் பாடி தங்கப் பதக்கம் பெற்றவர். இவர் முதல் முறையாக சென்னை மியூசிக் அகடமியில் பாடிய போது அவருக்கு வயது என்ன தெரியுமா? 13. அப்போது பஜன் பாடல்களைத் தான் முதல் முதலாக பாடினார்.
.jpg)




