பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 25.01.2026 அன்று காலை 9.45 மணியளவில் மன்னாரிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தின் சாரதி, தனங்கிளப்பு வரையிலான பயணத்தின்போது, வீதிப் பாதுகாப்பு மற்றும் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியில் உரையாடியவாறு பேருந்தைச் செலுத்தியமை தொடர்பில் காணொலி ஆதாரங்களுடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
இம்முறைப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பேருந்துச் சாரதி மறு அறிவித்தல் வரும் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.





