மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டம்.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டமானது மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதி பணிப்பாளர் ரொபட் ஒலிவர் பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (22) இடம் பெற்றது.

இதன் போது மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் தோட்டத்தின் முறைமையினுடாக பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு மற்றும் இவ்வருடங்களில் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கடந்த வருடம்14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்
490 பயனாளிகளினால் வீட்டுத் தோட்டத்தின் முறைமையினுடாக பாடசாலை போசாக்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத் திட்டத்தினூடாக மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் உள்ள 331 பாடசாலைகளைச் சேர்ந்த 48819 மாணவர்கள் நஞ்சற்ற போசாக்கான உணவினை பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புகான கூட்டாண்மை செயலகத்திற்கான பணிப்பாளர் நிலந்தி பெரெரா, பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஷ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வீ. நவநிதன், ரீ. நிர்மலராஜ், வலயக் கல்வி பணிப்பார்கள், விவசாயத்திணைக்கள மற்றும் சுகாதார திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக கணக்காளர் ,உலக உணவுத்திட்ட மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவசங்கர், உலக உணவுத்திட்ட விடய உத்தியோகத்தர் எம். வாகீசன் கலந்து கொண்டனர்.

இத் திட்டத்தின் மூலம் உள்ளூர் முட்டை உற்பத்தி செய்பவர்களுக்கு கோழித்தீன் விலை அதிகரிப்பு பாரிய சவாலாக காணப்படுவது இதன் போது சுட்டிக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த நாட்டுக்கான பிரதி பணிப்பாளர் இத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முறையான கண்காணிப்பு அவசியம் என்பதுடன் Smart விவசாயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்றார்.