நாளை சிவானந்தாவில் நூற்றாண்டு கால்கோள்விழா ஆரம்பம். நூற்றாண்டு கால்கோள் விழா தூபி திறப்பு!

 


உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நட்டு நாளை(24) சனிக்கிழமையுடன் நூறு வருடங்களாகிறது.

அந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் நூற்றாண்டு கால்கோள் விழாவினை ஆரம்பிக்கும் நிகழ்வு
நாளை நடைபெறும்.

கூடவே கால்கோள் நூற்றாண்டு விழா தூபியும் திறந்து வைக்கப்படவுள்ளது.

அதனையொட்டி ஊர்வலம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அந்த வகையில் நாளை (24) சனிக்கிழமை காலை 07.30 மணிக்கு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் சுவாமி விவேகானந்தர் மற்றும் சுவாமி விபுலானந்தர் அடிகளர்களின் சிலைகளின் பாதங்களுக்கு மலர் மாலை அணிவித்து ஊர்வலம் ஆரம்பமாகிறது.

அவ் வூர்வலம் கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தினை தரிசித்து, அதன் பின்னர் இராமகிருஷ்ண மிஷனை அடைந்து வழிபட்டு, பின் கல்லடி உப்போடை சித்திவிநாயகர் மற்றும் பேச்சியம்மன் ஆலயத்தினை அடைந்து வழிபாடுகளில் ஈடுபடும்.

தொடர்ந்து சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதிக்கு மலர் மாலை அணிவித்து பாடசாலையினை வந்தடைந்து சுவாமிகளின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படும்.

அங்கு பாடசாலையினை ஆரம்பிக்க நிலம், நிதி உதவி செய்த வள்ளல்களின் படங்களுக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் பாடசாலையில் அமைக்கப்பட்ட “கால்கோள் நூற்றாண்டு விழா தூபி “திறக்கப்படவுள்ளது.