(பாராளுமன்ற உறுப்பினர் – கந்தசாமி பிரபு )
இந்த நாட்டில் பல காலங்களுக்குப் பின் ஒரு பெண் பிரதமாராக எமது ஆட்சியில் நியமிக்கப்பட்ட பிரதமர் ஹருணி அமரசூரிய அவர்களை தாக்குகின்ற விதமாக ஒட்டுமொத்த பெண்களையும் இழிவு படுத்தும் விதமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அவர்களின் சத்தியாக் கிரகப் போராட்டம் ஆரம்பித்திருக்கின்றார் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கல்வி சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டிய தேவை எழுந்திருந்தது.
கடந்த காலங்களிலே பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், கல்வியை நிறைவு செய்து வெளியேறியதன் பின்னர் அவர்கள் தொழில் வாய்ப்புக்காக ஏங்கி நிற்பதையும் கருத்திற் கொண்டு கௌரவ பிரதமர் ஹருணி அமரசூரிய அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
பிள்ளைகள் எதிர்காலத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக தற்போதே அவர்களின் கல்வியிலே சீர்திருத்தங்களை மேற்கொண்டு அவர்களை இந்த நாட்டில் சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும், தொழில் வாய்ப்புக்காக ஏங்கி நிற்கக் கூடியவர்களாக அல்லாமல் சிறந்த சமூகப் பாங்கானவர்களாக மாற்றுவதற்காகவே இந்த கல்வி சீரமைப்பினை உருவாக்கியிருந்தோம்.
சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் 11 வருட பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறும் போது தொழில் வாய்ப்பு இல்லாத நிலையில் சமூக சீரழிவுக்கு உள்ளாகும் நிலைமையைக் காணமுடிகின்றது.
அதன் நிமித்தம் ஆரம்ப கட்டமாக தரம் ஒன்றிலும் தரம் ஆறிலும் இந்த சீரமைப்பை கொண்டு வந்திருக்கின்றோம். அடுத்ததாக அவர்கள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறும் போது ஒரு தொழில் நிலைமையை எய்தக் கூடிய வகையில் இந்த முறைமை மாற்றத்தைச் செய்திருக்கின்றோம். இதன் நிமித்தம் தொழில் கல்வியொன்றையும் உள்வாங்கியுள்ளோம். இதன் மூலம் உயர் கல்விக்குச் செல்ல முடியாதவர்கள் தொழில் வாய்ப்பிற்குச் செல்லக் கூடிய விதமாக இதனை மாற்றியமைத்துள்ளோம். இத்தோடு தொழில் முறை நிறுவனங்களை உருவாக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இருந்த போதிலும் பல காலங்களுக்குப் பின் ஒரு பெண் பிரதமாராக எமது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஹருணி அமரசூரிய அவர்களை தாக்குகின்ற விதமாக குறிப்பாகப் பெண்களை இழிவு படுத்தும் விதமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அவர்கள் சத்தியாக் கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார். அவரது கருத்துகளும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவே அமைந்திருக்கின்றது. அதே போன்று பிரதமரைப் பதவி நீக்க வேண்டும் என்று அவர்கள் அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள்.
பதாதைகளில் மாத்திரம் தான் சத்தியாக் கிரகப் போராட்டம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு தெரியவில்லை. மிகவும் உற்சாகமான முறையிலேயே அவர் இருக்கின்றார். ஊடகங்களுக்கு மாத்திரம் சத்தியாக் கிரகப் போராட்டமாகக் காட்டுவதற்கே அவர் முயற்சிக்கின்றார்.
சிறிய கூட்டமாக இருந்து கொண்டு இவர்கள் மீண்டும் இந்த நாட்டைக் குழப்புகின்ற வேலையைத் தான் இவர்கள் செய்கின்றார்கள். விமல் வீரவன்ச பற்றி அனைவருக்கும் தெரியும் மஹிந்த காலத்திலே அவர் செய்த ஊழல்கள் தொடர்பாக இப்போது கூட அவருக்கு எதிராக வழக்குகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. பல மோசடிகள், சமூகத்தை சீரழிக்கும் விடயங்களில் எல்லாம் முன்நின்று செயற்பட்ட ஒருவர். அவரது செயற்பாடுகளை மக்கள் என்றுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். முக்கியமாகப் பெண்கள் இவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. இவர்களை ஆதரிக்கப் போவதும் இல்லை.
இவர்கள் எமது பிரதமருக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு எதிராகத் தற்போது பல அரசியற் கட்சிகளும் எதிர்ப்பினை வெளியிட்டிருக்கின்றார்கள். இதனை ஒரு மோடத்தனமாக செயற்பாடாகவே அவர்களும் கருதுகின்றார்கள்.
ஒரு சில பாடப் புத்தகங்களிலே சில குறைபாடுகள் இருந்தன அதனை விசாரிப்பதற்காகவும், அவற்றைத் திருத்தி மீளக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் பிரதமரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து விடயங்களும் நேர்த்தியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது இவ்வாறான மூடத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அரசாங்கம் என்ற ரீதியில் இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். பிரதமர் என்பதைத் தாண்டி ஒரு பெண் மிக மோசமாக இழிவு படுத்துவதை எதிர்ப்பவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம் என்று தெரிவித்தார்





