சுகாதார அமைச்சருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது

 

 


சுகாதார அமைச்சருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது 

இதன்போது மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்குத் தெரியப்படுத்தினார்.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையில் பொதுவாக நிலவும் மருத்துவ ஆளணிப் பற்றாக்குறை, வெல்லாவெளி போரதீவுப்பற்று வைத்தியசாலையில் சுவசெரிய இலவச ஆம்பூலன்ஸ் சேவையை ஆரம்பித்தல், மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையை தரமுயர்த்தல், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவை விஸ்தரித்தல் போன்ற விடயங்களின் அவசியம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தடைப்பட்டிருக்கும் கரு வளர்ச்சி சம்மந்தமான மருத்துவ செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதிலுள்ள தடைகளை ஆராய்ந்து, அதனை மீள ஆரம்பிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நீண்ட நாள் குறைபாடாகவிருக்கும் மருந்து வகைகளைக் கொண்டு செல்வதற்கான லொறி இன்மை, மட்டக்களப்பு சிறைச்சாலையை ஒதுக்கப்பட்ட மாற்றிடத்திற்கு மாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும், சுகாதார அமைச்சர் நீதி அமைச்சரிடம் கலந்துரையாடி அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளல் மற்றும்
பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சுகாதார துறை சார் பல்வேறு பிரச்சினைகளைக் கலந்துரையாடும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார அதிகாரிகள் மற்றும் துறை சார் நிபுணர்களுடனும் விசேட கூட்டம் ஒன்றை நடாத்தி குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி குறித்த பிரச்சினைகளை சீர் செய்வதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.